‘மூக்குத்தி அம்மன் 2’ எப்போது ரிலீஸ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
சென்னை,நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2020-ஆம் ஆண்டு வெளியான 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் வெற்றி கண்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா மீண்டும் கதாநாயகியாக நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜிக்கு பதிலாக, இந்த முறை இயக்குநர் சுந்தர்.சி இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் சினேகா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி ஆகியோருடன் யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது.




