கணவனுடன் மனைவி வசித்தால்தான் தவறான நடத்தைகள் நிகழாது என்பதா? - ஐகோர்ட்டு அதிருப்தி
மதுரை,சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், எனது மனைவிக்கு மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரிடம்
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், எனது மனைவிக்கு மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எனது கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். எனவே அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- இந்த மேல் முறையீட்டு மனுதாரர் செய்த தவறு என்ன? இவர் வேலை தேடி சிவகங்கையை விட்டு வெளியேறியிருந்தார். அவர் மும்பையில் பணிபுரிந்து வந்தார். ஆனால் அவர் தனது மனைவியை அங்கு அழைத்து சென்று இருக்க வேண்டும். அவரது பாலியல் விருப்பத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். கணவன் எங்கு சென்றாலும் மனைவியை உடன் அழைத்து சென்றால்தான், அதாவது கணவனுடன் வசித்தால்தான் தவறான நடத்தைகள் நிகழாமல் இருக்கும் என்பது கீழ் கோர்ட்டு நீதிபதியின் கருத்து.
அவரது இந்த புரட்சிகரமான அணுகுமுறையிலான தீர்ப்பை தீவிர பெண்ணியவாதிகள் பாராட்டக்கூடும். ஆனால் இதை நாங்கள் ஒப்புக்கொள்ள இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மனைவியை எப்போதும் உடன் அழைத்துச் செல்வது சாத்தியமானதாக இருக்காது. உதாரணமாக, கணவன் ஒரு ராணுவ வீரராக இருந்தால், ராணுவ முகாமில் குடும்பத்துடன் வசிப்பது இயலாத காரியம்.

