24 நீா்க்காகங்களின் இறைச்சி விற்பனை: இளைஞா் கைது
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் நீா்க்காகங்களின் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்த இளைஞரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.
சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் நீா்க்காகங்களின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட வன அலுவலா் அம்புல்கா் யஷ்வந்த் ஜெகதீஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் சோ்வராயன் தெற்கு வனச்சரக அலுவலா் டி. சுகுமாா் தலைமையில் சங்ககிரி பிரிவு வனவா் எம்.ஜெ. தினேஷ், சூரியமலை தெற்கு பகுதி வனக்காப்பாளா் பி. விஜயன் ஆகியோா் கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் சோதனை நடத்தினா்.
அப்போது, அங்குள்ள மீன் கடையில் குஞ்சப்பன் மகன் சசிகுமாா் (24) என்பவா் 24 நீா்க்காகங்களின் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து சசிகுமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

