திருப்புவனம் பேரூராட்சி அவசர கூட்டத்தில் கூச்சல் குழப்பம் த.மா.கா., கவுன்சிலர்கள் தர்ணா
திருப்புவனம்,செப்.18-– திருப்புவனம் பேரூராட்சியில் நடந்த அவசர கூட்ட தீர்மானத்தை வாசிக்க மறுத்ததால் த.மா.கா.,
திருப்புவனம் பேரூராட்சியில் நடந்த அவசர கூட்ட தீர்மானத்தை வாசிக்க மறுத்ததால் த.மா.கா., கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சியின் அவசர கூட்டம் தலைமை சேங்கைமாறன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் அன்னலட்சுமி முன்னிலை வகித்தார். இங்கு வார மற்றும் தினசரி சந்தை கடந்த ஜூலையில் ஏலம் விடப்பட்ட நிலையில், அதற்கான ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றவே இக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் துவங்கும் முன் கூட்ட அரங்கின் நுழைவுவாயில் கதவை மூடுமாறு தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கு கவுன்சிலர்கள் செல்வராஜ், அயோத்தி, பாரத்ராஜா, வெங்கடேஸ்வரி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியதால் அனுமதித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர் பாரத்ராஜா
புதூர் சுடுகாட்டில் உள்ள தென்னை மரங்களில் கிடைக்கும் தேங்காய்களை ஏலம் விடாமல் தனிப்பட்ட முறையில் கொண்டு செல்வது ஏன் என கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்டு பேசிய தலைவர், த.மா.கா., கவுன்சிலர்களை மரியாதை குறைவாக வாடா, போடா என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர் பாரத்ராஜா இதே போன்று பேசினால் பதிலுக்கு நாங்களும் பேசுவோம் என எச்சரித்தார். வார மற்றும் தினசரிச் சந்தைக்கு ஒப்புதல் வழங்கப்படும் தீர்மானம் குறித்து தலைவர் தன்னிச்சையாக தீர்மான புத்தகத்தில் எழுதியதோடு, அதை கவுன்சில் கூட்டத்தில் வாசிக்கவும் மறுத்துவிட்டனர். இதனால் அத்தீர்மானத்தை வாசிக்க கூறி த.மா.கா., மற்றும் பா.ஜ., கவுன்சிலர்கள் தெரிவித்தும், தலைவர் மறுத்ததால் கூட்ட அரங்கு வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் செயல் அலுவலர் அன்னலட்சுமி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்.
