ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பை கொட்டுவதால் மக்கள் போர்க்கொடி! கோர்ட் உத்தரவை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அதிருப்தி
வண்டலுார்: வண்டலுார் -- முடிச்சூர் இடையிலான 112 ஏக்கர் பரப்புள்ள ஏரியின் கரை ஓரத்தில், மேய்க்கால் நிலத்தில், தொடர்ந்து கழிவுகள் கொட்டப்பட்டு, புதிய குப்பை கிடங்கை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்தேறி வரும் இந்த அட்டூழிய செயலால், ஏரியின் இயல்பு தன்மை கெட்டு, அதில் கழிவு நீர் கலந்து, நிலத்தடி நீர் மாசுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஏரியை பாதுகாக்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலுார் ஊராட்சியில், 112 ஏக்கர் பரப்பளவில் முடிச்சூர் ஏரி உள்ளது.
இந்த ஏரியின் கிழக்கில் பெருங்களத்துார், மேற்கில் வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, தெற்கில் வண்டலுார், வடக்கில் முடிச்சூர் ஆகியவை எல்லையாக உள்ளன. தவிர, 100 மீ., தொலைவில் மண்ணிவாக்கம் ஊராட்சியும் உள்ளது.

