விழுப்புரத்தில் மண்டல அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் சாதனை
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த திருவண்ணாமலை மண்டல அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டில் வென்ற மாணவர்கள், மாநிலப் போட்டிக்கு தேர்வாகினர்.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில், பள்ளி மாணவர்களுக்கான, மண்டல அளவிலான மல்லர் கம்ப விளையாட்டு போட்டிகள் கடந்த வாரம் நடந்தது. கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் போட்டியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, போட்டிகள் நடந்தது. இப்போட்டியில், திருவண்ணாமலை மண்டலத்தைச் சேர்ந்த விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்துார், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, மல்லர் கம்ப விளையாட்டு மாணவ, மாணவிகள் 450 பேர் வரை கலந்துகொண்டனர்.
மாணவர்கள், மாணவிகள் பிரிவுகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு தனித்தனி பிரிவுகளில் மல்லர் கம்ப போட்டிகள் நடந்தது. மாணவர்கள் மல்லர் கம்பத்தில் உடல் திறனை வெளிப்படுத்தினர்.இப்போட்டியின் நிறைவாக, பள்ளி மாணவர்கள் பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த மாணவர் மணிதர்ஷன் முதலிடமும், நந்தகுமார் இரண்டாமிடமும், அகிலன் மூன்றாமிடமும், பிரணித்குமார் நான்காம் இடமும் பிடித்தனர்.பள்ளி மாணவிகள் பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த முத்தரசி முதலிடமும், பிந்துஸ்ரீ இரண்டாமிடமும், ஹரியாசினி மூன்றாமிடமும், மோனிதா நான்காம் இடமும் பிடித்தனர்.மண்டல அளவிலான இந்த மல்லர் கம்ப போட்டியில், சிறப்பாக விளையாடி பரிசு, பதக்கம் வென்ற விழுப்புரம் மாணவர்களை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், விழுப்புரம் மல்லர் கம்ப கழக தலைவர் செந்தில்குமார், செயலாளர் ஜனார்த்தணன், பயிற்சியாளர் ஆதித்தன் உள்ளிட்டோர் பாராட்டினர். இப்போட்டியில் வென்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.



