பழநி வழித்தடத்தில் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுமா? ரயில்வே பயனாளர்கள், பக்தர்கள் வலியுறுத்தல்
பழநி: பாலக்காடு - திருச்செந்துார் ரயில் சேவையை அதிவிரைவு ரயில் சேவையாக மாற்றி, முன்பதிவு வசதி ஏற்படுத்த வேண்டும். பழநி ரயில்வே ஸ்டேஷன் வழியாக இரவு நேரத்தில் திருச்சி வழியே தாம்பரம் வரை செல்லும் ரயில் சேவை துவக்கப்பட வேண்டும். பழநியில் இருந்து காரைக்குடி, மயிலாடுதுறைக்கும், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயங்கும் மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி அதிவிரைவு ரயிலை தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயனாளர்கள், முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்மீக தலமான பழநி முருகன் கோயில், கொடைக்கானல் சுற்றுலா தளத்திற்கும் ஏராளமான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திர விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி கோயிலுக்கு வருகை புரிகின்றனர். பழநி வரும் பக்தர்கள் பெரும்பாலும் இரவு நேர பயணத்தில் ஊர் திரும்பி செல்ல திட்டமிடுகின்றனர். ஆனால், போதிய பஸ் வசதி இல்லாததால் பல மணி நேரம் பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருக்கும் அவல நிலை பல மாதங்களாக தொடர்கிறது.
பக்தர்கள் அவதி: மேலும் சிலர் விடுதிகளில் அறை எடுத்து தங்கும் சூழல் உருவாகிறது. இதனால் அவர்களுக்கு பொருட்செலவும், கால விரையம் ஏற்படுகிறது. இதனால் பழநி வரும் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். பழநி வழியாக இயக்கப்படும் 18 ரயில் சேவைகளில் தினசரி 8 ரயில் சேவைகள் உள்ளன. பழநி மார்க்கமாக திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் ரயில் திங்கள் அன்றும், துாத்துக்குடி - மேட்டுப்பாளையம் வெள்ளி, ஞாயிறு என 2 நாட்களும் இயக்கப்படுகின்றன. இதனை தினமும் இயக்கும் ரயில் சேவை வழங்க ரயில் பயணிகள் கோரிகின்றனர். பழநி முருகன் கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு மேல் தங்க ரத புறப்பாடு நடைபெறும். இதை தரிசித்துவிட்டு சொந்த ஊருக்கு செல்வதை பக்தர்கள் விரும்புகின்றனர். அச்சமயத்தில் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் அதிக கூட்டம் நிலவுகிறது. எனவே இரவு 9:00 மணிக்கு மேல் பழநியில் இருந்து செல்லும் ரயில் சேவைகள் இரவு நேரத்தில் இருந்தால் பக்தர்கள் சிரமமின்றி சொந்த ஊருக்கு செல்ல முடியும்.






