“கற்றுச் சாதிக்கும் மாணவிகள்; கற்பித்துச் சாதிக்கும் ஆசிரியர்கள்” - வியந்து பார்க்கவைக்கும் அரசுப் பள்ளி!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கடந்த 2020 க்கு பிறகு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 33 மாணவிகள் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவர்களாக உருவாக்கியுள்ளனர் அதற்கு முன்பு 9 மாணவிகள் மருத்துவர்களாக உள்ளனர். மேலும், பல்வேறு துறைகளிலும் படித்து சாதித்து வருகின்றனர். இந்த ஆண்டு (2026 ல்) நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில் 4 மாணவிகள் எம்.பி.பி.எஸ், ஒரு மாணவி பி.டி.எஸ் என 5 மாணவிகள் மருத்துவத்திற்கும் இரண்டு மாணவிகள் கால்நடை மருத்துவம் படிக்கவும் செல்கின்றனர் என்ற பெருமையும் பெற்றுள்ளனர்.
ஒரு அரசுப் பள்ளியின் இந்த தொடர் சாதனையை தமிழ்நாடு திரும்பி பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த சாதனை மாணவிகளை உருவாக்கிய இந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் கடந்த 4 ஆண்டுகளாக நல்லாசிரியர் விருது பெற்று தொடர் சாதனையை நிகழ்த்தி உள்ளனர். அதாவது, கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய தலைமையாசிரியர் கோவிந்தராஜ் நல்லாசிரியர் விருது பெற்றார். அதன் பிறகு 2024 ஆம் ஆண்டு பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி, 2025 ஆம் ஆண்டு ஆசிரியர் கொடியரசன், 2026 இந்த ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் குகன் ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நல்லாசிரியர் விருதுகள் பெரும் ஒரே அரசு பள்ளியாக இது திகழ்கிறது. இதற்கு முன்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் முதல் நல்லாசிரியர் விருதினை ஆசிரியை அல்போன்சாவும், அடுத்த சில ஆண்டுகளில் தமிழாசிரியர் துரைமாணிக்கம் இரண்டு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர்.
ஒரு அரசு பள்ளி மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் சாதிப்பதை போல அதே அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சாதித்து வருவது பெருமைக்குரியதாக உள்ளது என்கின்றனர். மேலும், தொடர்ந்து சாதித்து வரும் இந்த அரசு பள்ளியை பெற்றோர்களும், பொதுமக்களும், அதிகாரிகளுமே வியந்து பார்த்து வருகின்றனர். இந்த வியப்பிற்கெல்லாம் காரணமாக ஆசிரியர்கள் இருந்தாலும் மற்றொரு பக்கம் பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்.எம்.சி, பெற்றோர்கள், மாணவிகள், கல்வியாளர்களும் ஒருங்கிணைப்பாகவும் உறுதுணையாகும் இருப்பதே முதன்மைக் காரணம் என்கின்றனர் அப்பள்ளியின் ஆசிரியர்களும், மாணவிகளும். தொடர்ந்து சாதிக்கும் அரசுப் பள்ளியை நினைத்து பெருமை கொள்வோம்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

