தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆருக்கு மதுரையில் சிலை: தவெக - எம்எல்ஏ கோரிக்கை
சென்னை: ''தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையருக்கு, மதுரையில் வெண்கல திருவுருவ சிலை அமைக்க வேண்டும்,'' என, மதுரை கிழக்கு த.வெ.க., - எம்.எல்.ஏ., கார்த்திகேயன் கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது: மதுரையில் பல கிராமங்களில், ஜல்லிக்கட்டு விளையாட்டு உள்ளூர் அளவில் மக்களின் விழாவாக நடத்தப்படுகிறது. எனவே, பாரம் பரிய இடங்களில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம், நல வாரியம் அமைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பாதுகாப்பு மையம் அமைப்பதோடு, காளைகளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும்.


