"தவெக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணிக்கு எந்தப் பங்கமும் வராது" - விஜய் வசந்த் எம்பி நம்பிக்கை
"என் தந்தை வசந்தகுமார் இன்று இருந்திருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிக்கும் இந்தச் சூழலைப் பார்த்து அளவற்ற மகிழ்ச்சியடைந்திருப்பார்" - விஜய் வசந்த்.
தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், "சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அது நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போதைய புதிய தலைமுறையினர் வீதியில் இறங்கிப் போராடுவதைவிட, வீட்டுக்குள் இருந்தபடியே செல்போன் மூலமாகவே வெளிப்படையாகத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள்.
ஒரு பொதுக்கூட்டம் நடத்தினால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களையே சென்றடைய முடியும். ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு பல லட்சக்கணக்கான மக்களை எளிதில் சென்றடைகிறது. அதனால்தான் காங்கிரஸ் கமிட்டியும் சமூக ஊடகப் பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதே சமயம் சமூக வலைத்தளங்களில் எந்தக் கட்சியினர் அவதூறு பரப்பினாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்.



