இலங்கையில் ரூ.5 லட்சம் பீடி இலை பறிமுதல்
ராமேஸ்வரம்: இலங்கை புத்தளம் அருகே கடல் பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் ரோந்து சென்றனர். அப்போது கடலோரத்தில் மூடைகள் ஒதுங்கி கிடப்பதை கண்டனர். அவற்றை சோதனை செய்தபோது அதில் 2700 கிலோ பீடி இலைகள் இருந்தன. இவற்றை துாத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் கடத்தி வந்து நடுக்கடலில் காத்திருந்த இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து வருவதை கண்டதும் அந்நாட்டு கடத்தல்காரர்கள் மூடைகளை கடலில் வீசி விட்டு தப்பி இருக்கக் கூடும். இதன் மதிப்பு ரூ.5 லட்சம். பீடி இலைகளை இலங்கைக்கு கடத்திச் சென்ற துாத்துக்குடி மாவட்ட கடத்தல்காரர்கள் குறித்து மத்திய, மாநில உளவுப் போலீசார் விசாரிக்கின்றனர்.


