ஜிடிபி மருத்துவமனையில் 250 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு விபத்து சிகிச்சை கட்டடம் கட்ட முடிவு: ரேகா குப்தா
பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா (பி. எம். எஸ். எஸ். ஒய்) திட்டத்தின் கீழ் நகரின் டிரான்ஸ் யமுனா பகுதியில் உள்ள குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனையில் 250 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு விபத்து சிகிச்சை மையத்தை அமைக்க அரசு முடிவு
பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா (பி. எம். எஸ். எஸ். ஒய்) திட்டத்தின் கீழ் நகரின் டிரான்ஸ் யமுனா பகுதியில் உள்ள குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனையில் 250 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு விபத்து சிகிச்சை மையத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
இது குறித்து முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இதற்கு ரூ.244.87 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்ட இந்த வசதி 2028 க்குள் தயாராக இருக்கும். ஏழு மாடி கட்டடத்தில் 77 தீவிர சிகிச்சை படுக்கைகள், ஒன்பது உயா் தொழில்நுட்ப அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் 48 வெளிப்புற நோயாளிகள் துறை அறைகள் இருக்கும். தீவிர விபத்து நிகழ்வுகளுக்கு ஒரே கூரையின் கீழ் 24ஷ்7 அவசர, நோயறிதல் மற்றும் அறுவை சிகிச்சை வசதிகளை சிகிச்சை மையம் உறுதி செய்யும். கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் அமைந்துள்ள ஜிடிபி மருத்துவமனை வளாகத்திற்குள் புதிய கட்டடம் கட்டப்படும், இது கூடுதல் நிலம் வாங்க வேண்டிய தேவையை நீக்கும். பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனாவின் (பி. எம். எஸ். எஸ். ஒய்) நான்காம் கட்டத்தின் கீழ் இது கட்டப்படும்.



