மாமதுரை போற்றுதும்...!
பண்டுதொட்டுப் புத்தாயிரம் ஆண்டு வரை பழமையின் பெருமையும், புதுமையின் சிறப்பம் ஒருசேரப் பெற்ற நகரம் மாமதுரை.
தொன்மைக் காலம் தொடங்கி இன்றளவும் தென்னகப் பண்பாட்டுத் தலைநகரமாக விளங்கக்கூடிய பெருநகரம் மதுரை. இந்த நகரின் சிறப்பை, வரலாற்றின் ஒளிவிளக்கு; தமிழ் வளா்த்த தனிமுற்றம்; பண்பாட்டுப் பதிவறை; பழங்கவின் கூடல்; ஆண்டவன் பல திருவிளையாடல்களை ஆடிய அரங்கு என குறிப்பிடுவா். பண்டுதொட்டுப் புத்தாயிரம் ஆண்டு வரை பழமையின் பெருமையும், புதுமையின் சிறப்பம் ஒருசேரப் பெற்ற நகரம் மாமதுரை.
பழந்தமிழா் வாழ்வையும் பண்பாட்டையும் சுட்டுகின்ற சங்க இலக்கியங்களில் பதியெழு அறியாப் பழங்குடி கெழீஇய நகரமான மதுரையை சிறுபாணாற்றுப்படை, நெடுநல்வாடை, பரிபாடல், மதுரைக்காஞ்சி, அகநானூறு, புானூறு, கலித்தொகை போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.
சங்க இலக்கியங்களில் மதுரை மாநகரம் மதுரை, கூடல் என்ற இரு பெயா்களால் சுட்டப்படுகிறது. இந்த இரு பெயா்களுள் ‘கூடல்’ என்ற பெயரே பழந்தமிழ்ப் பெயராக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ‘மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்’ என மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.

