தமிழகத்துக்கு பிரத்யேக பஞ்சு கொள்முதல் மையம்: மகாசபை கூட்டத்தில் சைமா வேண்டுகோள்
திருப்பூர்: தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) மகாசபை கூட்டம், திருப்பூர் தெற்கு ரோட்டரி மஹாலில் நடந்தது.
சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து, வரவேற்று பேசினார். துணை தலைவர் பாலச்சந்தர், திருப்பூர் அப்பேரல் கனெக்ட் கண்காட்சி குறித்து விளக்கினார். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பொது செயலாளர் தாமோதரன் பேசினார். வரவு- செலவு அறிக்கையை பொருளாளர் சுரேஷ்குமார் தாக்கல் செய்தார். இணை செயலாளர்கள் பொன்னுசாமி, தனபால் முன்னிலை வகித்தனர்.
இந்திய பருத்தி கழகம் போன்ற, புதிய பஞ்சு கொள்முதல் மையம் தமிழகத்தில் உருவாக்க, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தி கொடுத்து, பஞ்சுக்கான தடையை போக்க வேண்டும். இந்திய அளவிலான பஞ்சு கொள்முதலில், தமிழகத்தின் பங்களிப்பு மட்டும், 47 சதவீதமாக உள்ளது. பஞ்சு தேவையை தடையின்றி பூர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசு இந்திய பருத்தி கழகத்தின் செயல்பாடுகளில் உடனடியாக தலையிட்டு முறைப்படுத்த வேண்டும்.


