'எங்களையும் சேர்த்துக்கோங்க..' BRICS-ல் இணைய துடிக்கும் பாக்.. இடம்கொடுக்காத இந்தியா.. காரணம் என்ன?
செய்தியாளர் - ராஜ்குமார்.ரபிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்டு உருவாக்கப்பட்ட BRICS அமைப்பு, தற்போது உலகின் முக்கியமான பொ
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்டு உருவாக்கப்பட்ட BRICS அமைப்பு, தற்போது உலகின் முக்கியமான பொருளாதார மற்றும் அரசியல் கூட்டமைப்புகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, சமீப ஆண்டுகளில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட புதிய நாடுகள் இணைக்கப்பட்டதன் மூலம் BRICS அமைப்பு மேலும் விரிவடைந்துள்ளது. இந்தோனேசியாவும் 2025-ம் ஆண்டு முழு உறுப்பினராக இணைந்தது. இந்நிலையில், இந்தியா தலைமையேற்று நடத்திய 18-ஆவது BRICS உச்சி மாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் BRICS உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, பல்வேறு நாடுகள் BRICS அமைப்பில் இணைந்து வரும் நிலையில், நமது அண்டை நாடான பாகிஸ்தான் மட்டும் ஏன் இன்னும் இந்த அமைப்பில் இணையவில்லை என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. உண்மையில், பாகிஸ்தான் BRICS அமைப்பில் இணைய அதிகாரப்பூர்வமாக 2023-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தது. அதன்பிறகு, உறுப்பினர் நாடுகளிடம் ஆதரவு பெறுவதற்கான முயற்சிகளையும் பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகியும் அந்த விண்ணப்பம் இன்னும் உறுப்பினர் பதவியாக மாறவில்லை.
பாகிஸ்தானின் BRICS முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவுடனும் பாகிஸ்தான் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. இருந்தபோதிலும், இந்தியாவின் எதிர்ப்பு இந்த உறுப்பினர் முயற்சிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமாக இந்தியா–பாகிஸ்தான் இடையேயான நீண்டகால அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரச்னைகள் பார்க்கப்படுகின்றன. காஷ்மீர் விவகாரம், எல்லைத் தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்னைகளில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இதனால், பாகிஸ்தானை BRICS போன்ற முக்கியமான சர்வதேச அமைப்பில் இணைப்பது தொடர்பாக இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏன், BRICS அமைப்பில் பாகிஸ்தான் சேர இந்தியாவின் இசைவு முக்கியம்? BRICS அமைப்பின் புதிய உறுப்பினரைச் சேர்ப்பதற்கு அனைத்து உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஒப்புதல் தேவைப்படுகிறது.




