பிரதமரின் பொதுவாழ்க்கை 25 ஆண்டு நிறைவு; ஒருமாத கால சேவை இயக்கத்தை அறிவித்தார் நிதின் நபின்
புதுடில்லி: பொது வாழ்க்கையில் 25 ஆண்டு காலத்தை நிறைவு செய்த பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக, வரும் 17ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு பல்வேறு பொதுநல சேவைகளை செய்யும் இயக்கத்தை துவங்குவதாக அக்கட்சியின் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டில்லி பாஜ தேசிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; அக்டோபர் 7ம் தேதியோடு, பிரதமர் மோடி பொது வாழ்க்கைக்கு வந்து, 25 ஆண்டு நிறைவடைகிறது. 2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற அவர், படிப்படியாக முன்னேறி, தற்போது நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
அவர் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு நாட்டின் பொருளாதாரமும், கொள்கையும் பலவீனமாக இருந்தது. தற்போது, இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் உலக அரங்கில் இந்தியாவின் நிலை உயர்ந்தது மட்டுமின்றி, நன்மதிப்பும் ஏற்பட்டுள்ளது. அவர் பிரதமராக பொறுப்பேற்றது முதல் இளைஞர்களிடையே நிலவி வந்த விரக்தியை, நம்பிக்கை மற்றும் நேர்மறை செயல்பாடுகளால் மாற்றியுள்ளார்.




