தொகுதி மறுவரையறை : மத்திய அரசு நினைப்பது என்ன?
நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மசோதா தாக்கல் செய்யப்படாமலேயே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் சிறப்பு கூட்டத்தொடர் நடத்தி இந்த மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இந்தாண்டு இறுதிக்குள் தொகுதி மறுவரையறை தொடர்பாக இறுதி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மத்திய பாஜக அரசு.
அரசியல் சாசனத்தின் பிரிவு 81-ன் அடிப்படையில் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 6.5 லட்சம் முதல் 8.5 லட்சம் வரை வாக்காளர்கள் இருக்கவேண்டும். (குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் விதிவிலக்கு) ஒரு எம்.பியால் அப்போதுதான் திறனுடன் தனது தொகுதியை நிர்வகிக்க இயலும். ஆனால் தொடர்ந்து அதிகரித்த மக்கள்தொகை காரணமாக இந்த எண்ணிக்கை ஒவ்வொரு தொகுதியிலும் அதிகரித்து வந்தது. தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் ஒரு மக்களவை தொகுதியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அதேநேரம் வடமாநிலங்களில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியிருக்கிறது. இதனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் தனது எல்லைக்குட்பட்ட தொகுதியை முழுமையாக கவனித்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சிக்கலை தீர்க்கவும் இந்திய அரசியலமைப்பு வகைசெய்கிறது. அதன்படி சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் மக்கள்தொகைக்கு ஏற்ப எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்கு அரசியல் சாசனம் சட்டப்பிரிவுகள் 82 மற்றும் 170 அனுமதிக்கிறது. இந்த தொகுதி மறுவரையறை நடைமுறை 1951, 1961, 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்புகளுக்குப் பிறகு நடைபெற்றது.
