முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு புகார்கள் வருகிறது தெரியுமா..? வெளியான தகவல்!
தவெக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் இருந்து முதலமைச்சரின் முகவரித் துறைக்கு தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் புகார்கள் வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் 1100 என்ற தொலைபேசி வாயிலாகவும், பிரத்யேக இணைய முகவரி வாயிலாகவும், பல வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சனைகள் தொடர்பாக மக்கள் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக, பட்டா, சாதிச்சான்றிதழ், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பதிவு செய்யாமல் இருப்பது, சாலை வசதி, குடிநீர் வசதி, கருணை அடிப்படையில் அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் புகார் மனுக்கள் அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே, தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள், அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெறப்படும் புகார்களும் முதலமைச்சரின் முகவரித் துறையுடன் இணைக்கப்படுகிறது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் நாள்தோறும் சுமார் 6 ஆயிரம் புகார்கள் வந்தன.



