70 லட்சம் மாணவர்களுக்கு மாத இறுதிக்குள் பஸ் பாஸ்
திருப்பூர்: பள்ளிக்கல்வித்துறையின் 'எமிஸ்' தளம் வாயிலாக, 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் இலவச பஸ் பாஸ் கேட்டு விண்ணப் பித்துள்ளனர். பஸ் பாஸ் அச்சிடும் பணி விரைவில் துவங்கி, இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு ஸ்மார்ட் பஸ் பாஸ் வழங்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு, 30 கி.மீ., வரை பயணிக்க இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதற்கான மாணவர் விபரங்கள், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'எமிஸ்' தளம் மூலம் போக்குவரத்து கழகத்துக்கு அனுப்பப்படுகின்றன.
மதுரை, கோவை, விழுப்புரம், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட எட்டு கோட்டங்களில் இருந்து, 70 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் மட்டும், 9.13 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.







