‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தில் நொய்யலுக்கு நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு
கோவை: ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை மத்திய அரசு சில ஆண்டுக்கு முன் அறிவித்தது. இதில், நொய்யல் ஆறும் சேர்க்கப்பட்டது. கூடுதுறையில் துவங்கி காவிரியில் கலக்கும் இடம் வரை ஆய்வு செய்து கழிவு நீர் கலக்காத வகையில், உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து, சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.
என்னென்ன செய்யலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன், தி.மு.க. ஆட்சி காலத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு ரூ.900 கோடி, மாநில அரசு ரூ.300 கோடி ஒதுக்கும். இதில், கோவை மாவட்டத்துக்கு ரூ.62 கோடி கிடைக்குமென தெரிவிக்கப்பட்டது. நொய்யலில் கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுக்க, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் என அடுத்தடுத்து வேலைகள் திசைதிரும்பியதும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. நீர் நிலைகளுக்கு தண்ணீர் தருவிக்கப்படும் வழங்கு வாய்க்கால்களில் கழிவு நீரே ஓடுகிறது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளும் கழிவு நீரை நேரடியாக வாய்க்காலில் சேர்ப்பிக்கின்றன. இதற்கு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே ஒரே தீர்வு. மத்திய அரசின் நிதி பெற்று, திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

