"சகோதர, சகோதரிகளே...!'
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க உரை நிகழ்த்தினார்.
"சகோதர, சகோதரிகளே...!' என்று தொடங்கிய இந்த உரையானது, இன்று வரை அனைவராலும் போற்றப்படக்கூடிய உலகப் புகழ்பெற்றது. இச்சொற்பொழிவின் நினைவாகவும் உலக அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாகவும் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 11-ஆம் தேதி "உலக சகோதரத்துவ தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.
முதன்முதலில் இந்திய மண்ணில் இருந்து சென்ற ஓர் ஆன்ம ஞானி விடுத்த உலக சகோதரத்துவத்துக்கான அழைப்பு இது. இந்த பூமியில் மனிதர் பலர், "தனது மதமே உண்மை; பிற மதங்கள் தவறானவை; அவை நிலைத்திருக்க உரிமையற்றவை' என்பது சமய வரலாற்றில் தொடர்ந்து வைக்கும் வாதமாகும். இவ்வாறான சுயமத மேட்டிமை வாதமும், பிற மதங்களை நிராகரிக்கும் போக்கும் மனிதகுலத்தை ரத்தக் களரியிலும், முரண்பாடுகளிலும் ஆழ்த்தும் என்பதை விவேகானந்தர் தம் சிகாகோ உரையில் ஆழமாக எச்சரித்தார்.





