கொத்தடிமை உழைப்புச் சுரண்டலை முற்றாக ஒழித்திட தீவிர நடவடிக்கை வேண்டும்! - திருமாவளவன்
காஞ்சிபுரம்,கொத்தடிமை உழைப்புச் சுரண்டலை முற்றாக ஒழித்திட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெள
கொத்தடிமை உழைப்புச் சுரண்டலை முற்றாக ஒழித்திட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இருளர் சமூகத்தைச் சார்ந்த நிறைமாத கர்ப்பிணி தேன்மொழியும் அவரது பச்சிளம் சிசுவும் பிரசவத்தின்போதே உயிரிழக்கும் பெருந்துயரம் நடந்துள்ளது. இதன் பின்னணியை அறியும்போது நெஞ்சு பதறுகிறது. பழங்குடியினரை இன்னும் கொத்தடிமைகளாக வைத்து அவர்களின் உழைப்பைச்சுரண்டும் கொடுமைகள் இன்னும் தொடர்கிறது என்பது இதன்மூலம் உறுதியாகிறது. இந்தக் குரூரம் நடந்தேறுவதற்கு காரணமாக இருந்த மரவியாபாரி ஆறுமுகம் என்பவரின் மனிதாபிமானமற்ற போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
மரம் வெட்டும் தொழிலாளியான ஆனந்தன் (40) மற்றும் இவரது மனைவி தேன்மொழி (35) ஆகிய இருவரும் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் உள்ள 'வெள்ளை கேட்' பகுதியில் ஆறுமுகம் என்ற விறகு வியாபாரியிடம் மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். இவர்கள் ஆறுமுகத்திடம் முன்பணமாக ரூ. 20,000 கடன் வாங்கியிருந்ததால், அவர் அமைத்துக் கொடுத்த தார்ப்பாய்க் கூடாரத்திலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 08/09/2026 அன்று, ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்குக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கணவர் ஆனந்தன் முயன்றிருக்கிறார். இதனையறிந்த மரக்கிடங்கு உரிமையாளர் ஆறுமுகம் "வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் அல்லது மரங்களை முழுமையாக வெட்டி முடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்" எனக் கூறி, அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவிடாமல் தடுத்துள்ளார். இவரது மனிதாபிமானமற்ற இந்த குரூர மனநிலை பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பணம், சாதி போன்றவற்றின் அடிப்படையிலான அவரது ஆதிக்கவெறி உளவியல் இதிலிருந்து வெளிப்படுகிறது.



