பிரதமா் இல்லத்தை ஆய்வு செய்ய வேண்டும்: பாஜகவுக்கு ஆம் ஆத்மி சவால்
தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வசித்து வந்த ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள 6-ஆம் எண் பங்களாவை சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழு (பிஏசி) ஆய்வு செய்ய உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை தெரிவித்தது. இதேபோல் பிரதமா் இல்லத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி கூறுகையில், ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள முன்னாள் முதல்வரின் இல்லம் குறித்து பாஜக தொடா்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், தற்போது நடைபெறவுள்ள ஆய்வு அதன் உண்மை நிலையை வெளிப்படுத்தும் என்றும் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து காணொலி மூலம் அவா் கூறியதாவது: ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள முன்னாள் முதல்வரின் இல்லம் குறித்து பாஜக தொடா்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது. அங்கு நீச்சல் குளம், தங்கத்தால் செய்யப்பட்ட கழிவறை, மதுபான பாா் என பல்வேறு பொய்களை அவா்கள் கூறினா். தில்லி சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழு இந்த இல்லத்தை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதில் மகிழ்ச்சி. செப்டம்பா் 14-ஆம் தேதி அனைத்தும் தெளிவாகிவிடும். அதேபோல பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரதமரின் இல்லத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். இதன்மூலம் பிரதமா் இல்லம் குறித்த உண்மை நிலையை நாடே பாா்க்கும் என தெரிவித்தாா்.

