ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் ஐந்தாண்டுகளாக தவிக்கும் முன்னாள் ஊழியர்
வடமதுரை: வடமதுரையில் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் மாற்றம் செய்த போது ஏற்பட்ட கவனக்குறைவான பதிவால் 5 ஆண்டுகளாக ரேஷன் பொருட்களை பெற முடியாமல் முன்னாள் ரேஷன் கடை ஊழியர் குடும்பம் பரிதவிக்கிறது.
வடமதுரை போஜனம்பட்டி நடராஜன். வேலாயுதம்பாளையம் ரேஷன் கடை ஊழியராக பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 2021 சட்டசபை தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க., அறிவித்த மகளிர் உரிமைத் தொகையை பெறும் நோக்கில், தனது மனைவியை ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக மாற்ற தனியார் சேவை மையம் சென்றார். அங்கு பதிவு பணி நடந்த போது ‛எந்த பொருளும் வேண்டாம்’ என கவனக்குறைவாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக ரேஷன் பொருட்களை பெற முடியாமல் இக்குடும்பம் தவிக்கிறது. ரேஷன் பொருட்கள் தொடர்பாக தவறுதலாக நடந்த கவனக்குறைவு பதிவை ரத்து செய்து வழக்கம் போல பொருட்கள் வழங்கக் கோரி கடந்த 2021 செப்.,21 முதல் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, கலெக்டரின் குறைதீர் முகாம் என பல மனுக்கள் வழங்கிய போதும், இதுவரையிலும் தீர்வு கிடைக்காமல் வயதான தம்பதி குடும்பம் பரிதவிப்பில் உள்ளது.
