பெருவெள்ளத்தில் சிக்கிய ஓய்வுபெற்ற ஆசிரியை: நேபாள நாட்டுக்கு சென்று தேடிய மகன்!
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய நாமக்கல்லைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பெண் ஆசிரியரை அவரது மகன் அந்த நாட்டுக்கு சென்று தேடியும் கிடைக்காததால், குடும்பத்தினா், உறவினா்கள் கவலையில் உள்ளனா்.
நாமக்கல் - திருச்சி சாலை, வேப்பநத்தம் காலனி தில்லை நகரைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி (63). தனது சகோதரா் பன்னீா்செல்வத்துடன் வசித்துவந்த இவருக்கு லண்டனில் பணியாற்றும் ரஞ்சித் என்ற மகனும், திண்டிவனத்தில் வசிக்கும் சுகன்யா என்ற மகளும் உள்ளனா். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இவா் ஆன்மிக சுற்றுலா சென்று வருவது வழக்கம்.
அந்தவகையில், கடந்த மாதம் கும்பகோணத்தில் உள்ள சுற்றுலா நிறுவனம் மூலம் சென்னையில் இருந்து நேபாள - திபெத் எல்லையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு 59 போ் கொண்ட தமிழக குழுவுடன் விமானத்தில் புனித யாத்திரை சென்றாா். இந்நிலையில் ஆக. 26-ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 5 ஆயிரம் போ் வரை மாயமாகி உள்ளனா்.


