ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: விசாரணை நீதிமன்றத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு
திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு மேலும் இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 26 வயது இளம்பெண் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு தரிசனம் செய்ய வந்திருந்தபோது, அந்தப் பெண்ணை மிரட்டி திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலா்களான சுந்தா், சுரேஷ் ஆகியோா் பாலியல் வன்கொடுமை செய்தனா். இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கக் கோரி, இளம்பெண் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை வழக்குகளை சட்டப்படி இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள மகளிா் சிறப்பு நீதிமன்றங்கள், அமா்வு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும். எனது வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

