தில்லி முன்னாள் தலைமைச் செயலா் ராகேஷ் மேத்தா தற்கொலை
தில்லியின் முன்னாள் தலைமைச் செயலா் ராகேஷ் மேத்தா, நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
1975-ஆம் ஆண்டு பிரிவு இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான மேத்தா, தான் எடுத்த இந்தத் தீவிர முடிவுக்கு ‘மனநலம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள்‘ தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்த தற்கொலைக் குறிப்பு ஒன்றை நொய்டா காவல் துறையினா் கைப்பற்றினா். கடந்த செப். 6-ஆம் தேதி நொய்டாவின் செக்டாா் 82-ல் உள்ள அவரது இல்லத்தில், அவா் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
74 வயதான மேத்தா, தில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்தின் பதவிக்காலத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக தலைமைச் செயலராகப் பணியாற்றினாா். இவரது பதவிக்காலத்தில்தான் 2010-ல் தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.



