அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் விவசாயிகள் ரசீது இங்கே; பணம் எங்கே
சோழவந்தான்: விக்கிரமங்கலத்தில் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் தராமல் இழுத்தடிப்பதாக அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இங்கு 2 மாதங்களுக்கு முன் செக்கானுாரணி ரோட்டில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொடுத்து பணம் பெற்று வந்தனர். திடீரென ஆய்வு செய்த வணிகப்பிரிவு பொது மேலாளர், விவசாயிகளின் நெல்லை வியாபாரிகளின் நெல் எனக் கூறி சில ஆவணங்களை எடுத்துச் சென்றார். அதன் பின் கொள்முதல் செய்ததற்கு ரசீது பெற்ற விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை.
விவசாயி மோகன் கூறியதாவது: எங்களுக்கு ரசீது வழங்கி 50 நாட்களுக்கும் மேலாகிறது. விவசாயிகள் பலரிடம் கொள்முதல் செய்த 700க்கும் மேற்பட்ட மூடைகளுக்கு பணம் வரவு வைக்கவில்லை. அதிகாரிகளுக்கு இடையேயான ஈகோ பிரச்னையில் யாரோ கொடுத்த தவறான தகவலால், எங்களுக்குரியதை, 'வியாபாரிகளின் நெல்' என அதிகாரிகள் கூறுகின்றனர். நாங்கள் பயிரிட்டதற்கு ஆதாரங்களை வைத்துள்ளோம்.


