நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!
காருக்குள் இருந்த மது பாட்டில்களை எடுக்கச் சென்றபோது, காரில் சாவி இருந்ததால் காரை கடத்திச் சென்றுள்ளனர். போதை தெளிந்ததும் காரை காட்டுப் பகுதியில் நிறுத்திவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.
வீட்டுக்குள் கார் நிறுத்த இடவசதி இல்லாததால், இரவு நேரத்தில் வீட்டின் முன்பகுதியில் தெருவிலேயே காரை நிறுத்துவது வழக்கம். அதன்படி காரை பார்க்கிங் செய்து விட்டுச் சென்ற அவர், காலையில் பார்த்தபோது காரை காணவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த அவர், நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


