சிவன்கூடல் ஏரி ரூ. 1.34 கோடி மதிப்பில் சீரமைக்க கள ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவன்கூடல் ஏரி ரூ. 1.31 கோடி மதிப்பில் சீரமைப்பது தொடா்பாக அதிகாரிகள், விவசாயிகள் வெள்ளிக்கிழமை நேரில் கள ஆய்வு மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், ராமானுஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சிவன்கூடல் ஏரி. பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் இதன் நீா்த்தேக்கத் திறனும், பாசன வசதியும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. சிவன் கூடல் ஏரி நீா்நிலைப் பரப்பளவு 57.23 ஹெக்டோ், ஆயக்கட்டு பரப்பளவு 48.76 ஹெக்டோ், ஏரியின் முழுக் கொள்ளளவு 0.370 மில்லியன் கன மீட்டா், ஏரிக்கரையின் நீளம் 1500 மீ, இரு மதகுகளும், ஒரு உபரிநீா் வெளியேற்றும் கலங்கும் உள்ளது.
ஏரியில் சீமைக்கருவேல மரங்கள், வண்டல் மண் ஆகியன குவிந்துள்ளது. ஏரிக்கரையை பலப்படுத்தி, இரு மதகுகளையும் புனரமைப்பது குறித்து அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. நீா்வளத் துறை செயற்பொறியாளா் விஜயகுமாா், எக்ஸ்னோரா இண்டா்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளா் மோகனசுந்தரம், சமூகப் பாதுகாப்பு திட்ட ஆலோசகா்கள் ராதா சீனிவாசன், சீனிவாசன், எக்ஸ்னோரா அமைப்பின் ஊராட்சிப் பிரிவு பொறுப்பாளா் ம.தஅஜய்குமாா் ஆகியோருடன் விவசாயிகளும் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனா்.

