கல்லராதினிபட்டி - கண்மாய்பட்டி ரோடு 3 கி.மீ., துாரம் அவதிப்படும் மக்கள்
படம் உண்டு சிவகங்கை, செப். 11-சிவகங்கை அருகே கல்லராதினிபட்டி - கண்மாய்பட்டி இடையே ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், திருமலைகோனேரிபட்டி ஊராட்சியின் கீழ் கல்லராதினிபட்டி உள்ளது. மதுரை, சிவகங்கை மாவட்டத்தை இணைக்கும் கிராமமாக இருக்கிறது. இங்கு 600 குடும்பங்களை சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் மதுரை மாவட்டம், மேலுார் ஒன்றியம், உறங்கான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய்பட்டி உள்ளது.
மேலுாரில் இருந்து மதகுபட்டி வரை செல்லும் அனைத்து பஸ்களும் கல்லராதினிபட்டி வழியாக தான் செல்கிறது. இது தவிர உறங்கான்பட்டி அரசு பள்ளி, மேலுார் மருத்துவமனைகளுக்கு இந்த ரோடு வழியாக தான் மக்கள், பள்ளி மாணவர்கள் பயணிக்க வேண்டும். மதுரை மாவட்ட நிர்வாகம் உறங்கான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய்பட்டி வரை தார் ரோடு புதிதாக போட்டுள்ளனர். ஆனால், சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கல்லராதினிபட்டியில் இருந்து கண்மாய்பட்டி வரை 3 கி.மீ., துாரத்திற்கு புதிதாக ரோடு போடாததால், பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான ரோட்டில் தான் மக்கள் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ரோட்டை புதுப்பிக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் கல்லராதினிபட்டி கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் இந்த ரோட்டில் பயணிக்க முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

