Powerlifting: சர்வதேச போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள்; இந்தியாவுக்கு பெருமை சேர்த்த 17 வயது மதுரா கர்
52 கிலோ சப்-ஜூனியர் பிரிவில் அசத்தல் சாதனை; ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட்லிஃப்ட் மற்றும் ஒட்டுமொத்தப் பிரிவில் முதலிடம்!
தென்னாப்பிரிக்காவின் சன் சிட்டியில் நடைபெற்ற 2026 ஐ.பி.எஃப் உலக சப்-ஜூனியர் பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை மதுரா கர் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியனாக வரலாறு படைத்துள்ளார். மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரியைச் சேர்ந்த 17 வயதான மதுரா, 52 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று தனது அபாரமான திறமையை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தியுள்ளார்.
12-ம் வகுப்பு படித்து வரும் மதுரா கர், தனது உடல் எடையை விட பல மடங்கு அதிக எடையைத் தூக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். போட்டியின் போது அவரது உடல் எடை 49.35 கிலோவாக இருந்த நிலையில், மொத்தமாக 292.5 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார். ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட்லிஃப்ட் என மூன்று தனிப்பட்ட பிரிவுகளிலும் முதலிடம் பிடித்ததுடன், ஒட்டுமொத்த எடையிலும் முதலிடத்தைப் பெற்று நான்கு தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றார்.

