பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா
அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு மேம்பாட்டு முன்னெடுப்பில் இந்தியா இணைந்ததாக அந்த நாட்டு வா்த்தக அமைச்சகம் தெரிவித்தது.
‘6ஜி தலைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கான அழைப்பு’ என்ற முன்னெடுப்பை கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா தொடங்கியது. 2030-க்குப் பின் 5ஜி வலையமைப்புக்குப் பதிலாக 6ஜி வலையமைப்பை கொண்டு வரும் நாடுகளுக்கு உதவும் வகையிலான வியூகங்களை வகுக்கும் இந்த முன்னெடுப்பில் ஜப்பான், ஜொ்மனி மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க வா்த்தக அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அடுத்த தலைமுறைக்கான 6ஜி வலையமைப்பை மேம்படுத்தும் முன்னெடுப்பில் அமெரிக்கா மற்றும் 24 நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

