சின்னசேலம் - கூகையூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அவசியம்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை
சின்னசேலம்: சின்னசேலம் - கூகையூர் சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னசேலம் ரயில் நிலையத்திலிருந்து சேலம், விருத்தாசலம் இடையே 4 தினசரி ரயில்களும், 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.
யஷ்வந்பூர், புதுச்சேரி பகுதிகளுக்கு வாராந்திர ரயில்களும் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ரயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, விசாகப்பட்டிணம், ஆந்திரா, துாத்துக்குடி, போன்ற இடங்களிலிருந்து ரேஷன் அரிசி, உரம் போன்றவைகள் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு பின், இங்கிருந்து லாரிகள் மூலம் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சின்னசேலம் அடுத்த குரால், தோட்டப்பாடி, காலசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பெத்தாசமுத்திரம், வீரபயங்கரம், கூகையூர், பாக்கம்பாடி, நைனார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சின்னசேலம் கூகையூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.




