செங்கடலில் முற்றிய மோதல்.. பாப் அல்-மந்தப் முடக்கம்.. இந்தியாவுக்கு அடுத்த அதிர்ச்சி?
ஈரானுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், மத்திய கிழக்கில் அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, ஏமனின் தலைநகர் சனா உள்ளிட்ட பகுதிகளை ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், தங்களுக்கு ஆதரவாக இருந்த ஆட்சியாளர்களை நீக்கிவிட்டதால், சவுதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. அதேசமயம், ஏமனின் மற்ற பகுதிகளையும் கைப்பற்ற ஹவுதிக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்தச்சூழலில் தான், கடந்த ஒரு வார காலமாக ஏமனின் வடக்குப் பகுதியில் இருந்துகொண்டு, சவுதி அரேபியாவின் எல்லையை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இதன் ஒருபகுதியாக, சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு வசம் இருந்த முக்கிய செங்கடல் துறைமுக நகரமான ஏமனின் மொகா (Mokha) நகர் ஹவுதி படையினரால் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, செங்கடலில் உள்ள முக்கியத் தீவான 'ஜுகார்' (Zuqar) தீவையும் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் ஹவுதி கைப்பற்றியது.
ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையான பாப் அல்-மந்தப் நீரிணை, மொகா நகரில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளது. இதனால், மொகாவைக் கைப்பற்றிய ஹவுத்திப் படைகள் அடுத்ததாக பாப் அல்-மந்தப் நீரிணையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் தான், பாப் அல்-மந்தப் நீரிணையை குறிவைத்து ஹவுத்திகள் சுமார் 18 மணி நேரம் தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தி வந்தன. இதன் முடிவில், பாப் அல் மந்தப் ஹவுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.

