'தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரே ஆதரவு கேட்டார்; நிச்சயமாக வெல்வோம்'-பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
சென்னையில் தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''எந்த ஒரு திட்டம் வந்தாலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதுதான் முக்கியம். இங்கே வரும் திட்டங்கள் யாருக்காக வருகிறது மக்களுக்காக வருகிறது. அதை மக்கள் ஏற்றுக் கொண்டால்தான் அது மக்கள் திட்டம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே ஒட்டுமொத்த மக்கள் ஏற்றுக்கொள்ளும் திட்டங்களை செய்ய வேண்டும்.
பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டது என்கிறார்கள். பீச் பக்கத்தில் தலைமைச் செயலகம் என்கின்றார்கள். இதற்கு எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உண்டு. எனவே எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அங்கம் வகிக்கும் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். நிச்சயமாக அதற்காக ஒன்றாக இணைந்து உழைப்போம்.
மு.க.ஸ்டாலின் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பரந்தாமனையும் சுகன்யாவையும் அறிவிக்க இருக்கிறோம். நிச்சயமாக உங்களுடைய ஆதரவு வேண்டும் என்று கேட்டார். கண்டிப்பாக தேமுதிக திமுக கூட்டணியில் தான் இருக்கும். எனவே தேமுதிகவின் ஒத்துழைப்பு நூறு சதவீதம் இருக்கும். உங்கள் ஒப்புதலோடு நான் அறிவிக்கப் போகிறேன் என்று சொன்னார். தாராளமாக நீங்கள் அறிவியுங்கள் என்று சொன்னேன். அதுபோல அவரவர்கள் கட்சி நிலைப்பாடு உள்ளது. எல்லோரும் உழைக்கப் போகிறோம். முடிவு மக்கள் கையில் இருக்கிறது. மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு'' என்றார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
