ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை
ஸ்ரீவில்லிபுத்துார்: திருப்பதி திருமலை வெங்கேடஸ்வர பெருமாள் கோயில் புரட்டாசி பிரமோத்ஸவம் 5ம் நாளில் ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பட்டு, மங்களப்பொருட்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டன.இதை முன்னிட்டு நேற்று காலை 11:15 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு மாலை, கிளி, பட்டு சாற்றி மங்களப்பொருட்கள் சமர்ப்பித்து சிறப்பு பூஜைகளை ராஜா பட்டர் செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின் ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு மங்களப்பொருட்கள் ஒரு வெள்ளி கூடையில் வைக்கப்பட்டு ஸ்தானிகம் கிருஷ்ணன் தலைமையில் உட்பிரகாரம் சுற்றி வரப்பட்டு திருப்பதிக்கு காரில் கொண்டு செல்லப்பட்டது. செயல் அலுவலர் சக்கரையம்மாள், பட்டர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராம்கோ நிறுவனத்தினர் செய்தனர்.
இன்று(செப்., 18) காலை திருமலை ஜீயர் மடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு திருவீதி சுற்றி வந்து கோயிலில் மாலை, மங்கலப்பொருட்கள் ஒப்படைக்கப்படுகிறது. இதனை நாளை (செப்., 19) காலையில் பெருமாளுக்கும், மாலையில் மலையப்பசாமிக்கும் சாற்றி கருட சேவை நடக்கிறது.



