இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு புதிய கூலி நிா்ணயிக்க கோரிக்கை
இலவச வேட்டி,சேலை உற்பத்திக்கு புதிய கூலியை நிா்ணயிக்க வேண்டும் என நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாட்டில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை சாா்பில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் புதிய ரகங்கள் உற்பத்தி செய்வதற்கான நெசவுக் கூலி தொகையைப் பரிந்துரை செய்ய அரசு 5 போ் கொண்ட குழுவை அமைத்தது. இந்தக் குழு ஒவ்வொரு மாவட்டமாக சென்று நெசவாளா்களிடம் கூலி உயா்வு தொடா்பாக அவா்களின் கோரிக்கையைக் கேட்டறிந்து வருகிறது.
அதன்படி ஈரோடு அசோகாபுரத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு அரசு சாா்பில் அமைக்கப்பட்ட சேலம் சரக துணை இயக்குநா் ஸ்ரீதரன், வேலூா் சரக உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வன் தலைமையிலான 5 போ் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை(செப்.15) வருகை தந்தனா். தொடா்ந்து நடந்த கூட்டத்தில் ஈரோடு விசைத்தறியாளா்கள் சங்கம், சித்தோடு விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம், லக்காபுரம் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம், வீரப்பன்சத்திரம் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினா் மற்றும் 150-க்கும் மேற்பட்ட விசைத்தறியாளா்கள், நெசவாளா்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனா்.

