சிங்கப்பூர் மாரியம்மன் கோவில்
சிங்கப்பூரில் பழமையான, புகழ்பெற்ற இந்து கோவில்களில் ஒன்று, ஸ்ரீ மாரியம்மன் கோவில். இது சிங்கப்பூரின் சைனா டவுன் பகுதியில் சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவில் 1973-ம் ஆண்டு, சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னமாக அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழ் மக்களின் துணையோடு 1827-ம் ஆண்டு மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. இங்கு மாரியம்மனை முதல் தெய்வமாகவும், மூலஸ்தான தெய்வமாகவும் அமைத்துள்ளார்கள்.
இக்கோவில் உருவாக காரணமாக இருந்தவர் நாராயணபிள்ளை என்பவர் ஆவார். 1822-ம் ஆண்டு முதன்முதலாக, கோவில் அமைப்பதற்கான நிலத்தை வழங்க அந்நாளைய கிழக்கிந்திய கம்பெனி முன்வந்தது. சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது.



