மலைப்பாதையில் மினி பஸ் கவிழ்ந்து 22 பக்தர்கள் காயம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை மலைப்பாதையில், பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து, 22 பேர் காயமடைந்தனர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையிலிருந்து, 22 பக்தர்கள் பாலமலை ரங்கநாதரை தரிசிக்க வந்தனர். இவர்கள் மூன்று நாட்களும் கோவில் வளாகத்தில் தங்கி கோவில் வளாகம், அன்னதான கூடம், தெப்பக்குளம், கோவிலின் சுற்றுப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை, 6:00 மணிக்கு திருநெல்வேலி புறப்பட்டு செல்ல பால மலையிலிருந்து மினி பஸ் வாயிலாக அடிவாரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மினி பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் இருந்த, 22 பக்தர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. அனைவரும் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


