இயற்கையின் கொடை
மலைகளின் தோற்றமும் அதன் வயதும் அழகியல் அதிசயம். இவ்வாறான அதிசயங்களில் ஒன்றான, இயற்கையின் கொடையான 'பஞ்சபாண்டவர் மலை', இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.
மதுரை அருகேயுள்ள மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் கீழவளவு கிராமத்தின் பிரதான சாலையின் இரு பக்கங்களிலும் உயரம் அதிகமில்லாத மலைக் குன்றுகள் நிறையப் பிரிந்திருக்கின்றன. கிழக்குக் குன்றின் பகுதியில் இயற்கையாக ஒரு குகையும், இடது பக்கம் பஞ்ச பாண்டவர் மலையும் அமைந்திருக்கின்றன.
இங்கு ஐந்தாறு மலைகள் ஒன்றோடொன்று தொடர்ச்சியாக ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு சில மலைகள் வெட்டி எடுக்கப்பட்டுவிட்டன. அதனால் மீதமிருப்பது பஞ்சபாண்டவர் மலை மட்டும்தான்.

