கேரளம்: தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து நேரலையை முடக்கிய போலீஸ்; பினராயி விஜயன் கண்டனம்
"ஊடகங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வெளிப்படையான தாக்குதலுக்கு முதலமைச்சரும், உள்துறை அமைச்சருமே உரிய பதிலளிக்க வேண்டும். பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த இழிவான, வெட்கக்கேடான தாக்குதலை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்" - பினராயி விஜயன்.
கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் ‘ரிப்போர்ட்டர் டிவி’ தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை சுமார் 5:50 மணியளவில், திருக்காக்கரை உதவி ஆணையர் பினோய் சந்திரன் தலைமையில் லத்திகள் மற்றும் கேமராக்களுடன் போலீஸார் அதிரடியாக நுழைந்தனர்.
நியூஸ் ரூமுக்குள் புகுந்த அதிகாரிகள், அங்கு பணியில் இருந்த பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், களத்தில் இருக்கும் செய்தியாளர்களைத் தொடர்புகொள்வதற்காக நியூஸ் டெஸ்க்கில் வைக்கப்பட்டிருந்த அலுவலக தொலைபேசிகளையும் போலீஸார் பறித்துள்ளனர்.


