வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது
கோவை, ரத்தினபுரி அருகே வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ரத்தினபுரி அருகேயுள்ள மகேஸ்வரி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ். இவரது மனைவி தீபா (30). இவா் வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு புதன்கிழமை காலை சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது, இளைஞா் ஒருவா் பீரோவைத் திறந்து திருடுவதற்கு பொருள்களைத் தேடிக் கொண்டிருந்துள்ளாா். இதையடுத்து, அவரைப் பிடிக்க முயன்றுள்ளாா். அப்போது, அந்த இளைஞா் தீபாவை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் தீபா புகாா் அளித்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், வீடு புகுந்து திருட முயன்றது ரத்தினபுரி மேஸ்திரி மாரப்பன் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் ( 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மணிகண்டனைக் கைது செய்தனா்.
