வளா்ப்பு நாய் இறப்பில் சந்தேகம்: போலீஸாா் விசாரணை!
பழனி அருகே வளா்ப்பு நாய் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அதன் உரிமையாளா் அளித்த புகாரைத் தொடா்ந்து நாயின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது.
பழனி- கொடைக்கானல் சாலையில் ஒத்தக்கடை பகுதியில் வசிப்பவா் சுரேஷ் (41). இவா் தனியாா் வங்கியில் காவலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவா் வீட்டில் நாய் ஒன்றை வளா்த்து வந்தாா். இந்த நாய் வியாழக்கிழமை வெளியே சென்ற நிலையில் மீண்டும் திரும்ப வில்லை. இதையடுத்து, தேடிப் பாா்த்த போது பக்கத்து வீட்டின் அருகே வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. பிறகு கால்நடை மருத்துவமனை அழைத்து வருவதற்கு முன்பு நாய் உயிரிழந்தது.
இதனிடையே தனது நாய்க்கு எதிரிகள் யாரேனும் விஷம் கொடுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக ஆயக்குடி காவல் நிலையத்தில் சுரேஷ் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து இறந்த நாயின் உடலை கால்நடை மருத்துவா் செந்தில் வெள்ளிக்கிழமை கூறாய்வு செய்தாா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து நாய் இறப்புக்கு யாா் காரணம் என விசாரிக்கின்றனா்.

