தேசியம்/ சில வரி செய்திகள்
மோசடியில் ஈடுபட்ட 330 பேர் கைது குவஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா
குவஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, போலீசாரை போல் ஆள்மாறாட்டம் செய்வது, மொபைல் போனில் மக்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, இரு நாட்களில் மட்டும், 330 பேரை கண்டறிந்து போலீசார் கைது செய்தனர். இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மும்பை: மஹாராஷ்டிராவில், அக்., 11ல் நவராத்திரி விழா தொடங்குகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘கர்பா, தாண்டியா’ போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். இந்நிகழ்ச்சிகளில், முஸ்லிம்கள் பங்கேற்பதை தடை செய்ய, வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது. இதற்காக, பங்கேற்பாளர்களின் அடையாளத்தை உறுதிபடுத்த, அவர்களின் ஆதார் அட்டைகளை சரிபார்ப்பது மற்றும் நெற்றியில் திலகம் இடுவது உள்ளிட்டவற்றை வி.எச்.பி., மேற்கொள்ள உள்ளது. முஸ்லிம்கள் நவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்க ஆர்வமாக இருந்தால், தங்கள் குடும்பத்தினருடன் வரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சஹாரன்பூர்: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சஹாரன்பூர் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டவிரோதமாக மசூதி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. ஜூலை 16ல், அந்த மசூதியை இடிக்கும்படி சஹாரன்பூர் நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இதை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இடிக்கப்பட்டது.
