பஸ் ஸ்டாண்ட் கூரை பணி தொய்வு
சிங்கம்புணரி:சிங்கம்புணரியில் பஸ் ஸ்டாண்ட் கூரை பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்பேரூராட்சியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வெயில், மழைக்கு ஒதுங்க மேற்கூரை இல்லாமல் இருந்தது. இது பற்றி ஏற்கனவே தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் கிழக்குப்புறம் தகர கூரை அமைக்கப்பட்டது. தற்போது மேற்குப் புறமும் கூரை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டின் ஒரு பக்க வாயிலை அடைத்து விட்டு கூரை அமைக்கும் பணி நடக்கிறது. இதன் காரணமாக காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து பஸ்களும் நின்று செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே இப்பகுதி நெரிசலுக்கு உள்ளாகும் பகுதி என்பதால் போக்குவரத்து போலீசார் நிலமையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே பஸ் நிலைய மேற்கூரை பணியை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

