புதிய உச்சத்தை எட்டிய இந்தியா-பிரான்ஸ் உறவுகள்; பாரிஸ் கோவில் திறப்பு விழாவில் மோடி பெருமிதம்
புதுடில்லி: இந்தியா-பிரான்ஸ் உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன என பாரிஸ் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
பிரான்சின் பாரிஸில் உள்ள சுவாமிநாராயண் கோவில் திறப்பு விழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவும், பிரான்சும் வலுவான உறவை உருவாக்கி வருகிறது. சுவாமிநாராயண் கோவில் கலாசார உறவுகளை வலுப்படுத்தும், கைவினைத்திறனைப் பிரதிபலிக்கும்; இந்தியா-பிரான்ஸ் உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. நீண்டகால கலாசார மற்றும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது; இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பிரான்சில் இந்திய வீரர்கள் செய்த தியாகம், இன்றளவும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறது என்பதற்கு வரலாறு சாட்சியாக நிற்கிறது. சமஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்துவதில் பிரெஞ்சு அறிஞர்கள் ஆற்றிய முக்கியப் பங்கை மொழி ஆர்வலர்களும் அறிவார்கள். இன்று, யோகா நமது நாடுகளுக்கு இடையே மக்கள் தொடர்புகளுக்கான ஒரு பாலமாகவும் மாறியுள்ளது. சர்வதேச யோகா தினத்தன்று ஈபிள் கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள், பிரான்சில் யோகாவின் மகத்தான பிரபலத்தைப் பிரதிபலித்தன.


