ராணுவத்தை சந்தேகிக்கும் அமெரிக்க அரசு : உயர் அதிகாரிகளுக்கு 'பாலிகிராப்' சோதனை!
ஈரான் போரில் அமெரிக்கா தயாராக இல்லை என்ற விமர்சனங்கள் மத்தியில், பாட்ரியாட் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் வேகமாக குறைந்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட செய்தி, ராணுவத்தின் உள்கட்டமைப்பு ரகசியங்கள் கசியும் அபாயத்தை வெளிப்படுத்தியது. இதனால் பென்டகன் தலைமையகத்தில் மூத்த அதிகாரிகள், முக்கிய ஊழியர்கள் மீது பொய் கண்டறியும் பாலிகிராப் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி, தேசிய பாதுகாப்பு விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. போரின் முதல் வாரத்தில் இந்த கூட்டணிக்கு பெரிய அளவிலான வெற்றிகள் கிடைத்தன. முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர்.
ஆனால், இந்த பாதிப்பில் இருந்து ஈரான் விரைவில் மீண்டு அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை தாக்க தொடங்கியது. மேலும் உலக வர்த்தகத்தின் உயிர் நாடியான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதன் காரணமாக இந்த போர் விரைவில் முடிவடைந்துவிடும் என எதிர்பார்த்த அமெரிக்காவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

