சாலையை அகலப்படுத்தவில்லை என்றால் பாலம் கட்டியும் பயன் இல்லை
மேட்டுப்பாளையம்: லிங்காபுரம் - காந்தவயல் சாலையை அகலப்படுத்தவில்லை என்றால், புதிய பாலம் கட்டியும் பயன் இல்லை, என, விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட லிங்காபுரம் - காந்தவயல் இடையே, காந்தையாறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடந்து காந்தவயல், மொக்கை மேடு, காந்தையூர், உளியூர் ஆகிய மலைவாழ் கிராமங்களுக்கு மக்களும், விவசாயிகளும் சென்று வருகின்றனர். காந்தையாற்றில் தண்ணீர் தேங்கி நின்றால், மாணவ, மாணவியர், பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் பரிசலில் பயணம் செய்வது வழக்கம். காந்தையாற்றின் குறுக்கே கடந்த மூன்று ஆண்டுகளாக, உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.
லிங்காபுரம் வனப்பகுதியில் இருந்து, காந்தையாறு பாலம் வரை, சாலை உள்ளது. இந்த சாலை வழியாக மலைவாழ் மக்கள், சென்று வருவதோடு, விவசாயிகள் விளை பொருட்களை வாகனங்களில் கொண்டு வருகின்றனர். விரைவில் பாலம் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஆனால் பாலத்துக்கு செல்லும் சாலை அகலப்படுத்தாமல் உள்ளது. இதுகுறித்து மலைவாழ் மக்கள், மற்றும் விவசாயி ரத்தினசாமி ஆகியோர் கூறியதாவது: பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல், விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய கூலி வேலைக்கு, 500க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருவர். வாழை மற்றும் காய்கறிகளை அறுவடை செய்து, வாகனங்களில் காந்தவயல், காந்தையாறு சாலை வழியாக லிங்காபுரம், சிறுமுகைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

