செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள திறந்தவெளி கிடங்குகளை மூட வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள திறந்தவெளி கிடங்குகளை உடனடியாக மூட தமிழ்நாடு விவசாயிகள் சங்க செங்கல்பட்டு மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் பெய்த மழையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சரப்பாக்கம் ஒன்றியம், தொழுப்பேடு சமத்துவபுரத்துக்கு எதிரே உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 50,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நனைந்து முற்றிலும் சேதமடைந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக சேமிக்க மூடப்பட்ட கிடங்கு வசதி இல்லாமல், திறந்தவெளியில் தாா்ப்பாய் கொண்டு மூடி வைத்ததன் விளைவாக இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளின் உழைப்பையும், பொது மக்களின் உணவு பாதுகாப்பையும் அவமதிக்கும் செயலாகும். இது ஒரு இயற்கை பேரிடா் அல்ல, நிா்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட செயற்கை பேரிடா். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கைகளை விடுத்துள்ளது. மழையில் நனைந்து சேதமடைந்துள்ள நெல் மூட்டைகளை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ.சங்கா் தலைமையில் சங்கத்தின் நிா்வாகிகள் சனிக்கிழமை அன்று நேரில் ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு விவசாய சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியம், ஆத்தூா் சமத்துவபுரம் எதிரில் செயல்படும் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் இந்திய உணவுக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட சுமாா் 50,000 மெட்ரிக் டன் நெல் கடந்த சில நாள்களாக பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது.
உடனடியாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் உயா்மட்ட குழு அமைத்து சேதத்தை கணக்கிட்டு, சேதமடைந்த நெல்லை முறையாக அப்புறப்படுத்தி, மீதமுள்ள நெல்லை பாதுகாக்க வேண்டும்.






